Tuesday, July 2, 2019

மில்டூறா அதிகாலை -1

இற்றைக்குச் சரியாக ஈராண்டுகளின் முன்பு மில்டூறாவில் அதிகாலை சூரிய உதயத்தைப் பார்த்த படத்தைக் கண்டதில் மில்டூறா பற்றி எனது பயண நினைவுகளைப் பகிர எண்ணம் வந்தது.

நீண்டகாலமாகவே இதுதொடர்பில் ஆர்வமிருந்தாலும் இப்போதெல்லாம் எழுதுவதற்கு இருக்கும் பஞ்சியினால் அது சாயத்தியப்படவில்லை. அதைவிட, நான் சேமித்து வைத்திருந்த பல படங்கள் தொலைந்துபோனதும் ஒரு காரணம்.
மனைவியின் கணினியிலும் தொலைபேசியிலும் சேமிக்கப்பட்டிருந்த பல படங்கள் இப்போது தோண்டியெடுக்கப்பட்டதால் சிலவற்றைப் பகிரலாமென எண்ணம் வந்தது.



முந்தியநாள் இரவு ஒன்பது மணியளவில் மெல்பேணிலிருந்து இரண்டு கார்களில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட ஆறுமணித்தியாலப் பயணம். வழமையாக துார இடங்களுக்குரிய எனது பயணத் திட்டமிடலில் இந்தநேரம்தான் தெரிவாக இருக்கும். அதிகாலை 3 மணியளவில் போய்ச்சேர்ந்து 3மணிநேரம் துாங்கினால் ஒருநாள் சேமித்துவிடலாமென்பது எனது திட்டம். மில்டூறாப் பயணமும் அப்படித்தான்.

ஆனால் அன்றைய இரவு மில்டூறாவில் வழமையைவிட அதிக குளிர் என்பது வானிலை எதிர்வுகூறலாக இருந்தது. நாங்கள் போயச்சேரும்போது -3°C. 

எனக்கும் மனைவிக்கும் மில்டூறாவில் அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்கவேண்டுமென்பது நீண்டநாள் விருப்பம். என்னவோ தெரியவில்லை மில்டூறா மறே  (murray river)ஆற்றங்கரையில் சூரியனின் உதிப்பும் மறைவும் புகைப்படமாக எடுத்துப்போடுவது அப்படி பிரபலம். இன்றும் முகநுாலில் அதற்கென்று ஒரு கூட்டமே உருவாகிவிட்டிருக்கிறது.

சரி, எந்தக் குளிரென்றாலும் அன்று ஆற்றங்கரைக்குப் போவதென்பது முடிவு. அதிகாலை 3 மணிக்குப் போய்ச் சேர்ந்து அந்தக் குளிரில் படுத்துறங்கி அதிகலை ஐந்தரைக்கு எழுந்து நானும் மனைவியும் ஆற்றங்கரைக்கு ஓடினோம். மறவன் அப்போது இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருந்ததால் பேத்தி அவனைக் கொண்டுபோக விடவில்லை.

ஆற்றங்கரையை அடையும்போதும் வெப்பநிலை -3°C தான். காலை 8 மணிக்குத்தான் -1°C க்கு வந்தது. நாங்கள் என்னதான் அதிகாலையில் போய்ச் சேர்ந்தாலும் சூரியன் வந்ததென்னவோ 7 மணிக்கும் பிறகுதான்.

மெல்பேர்ண் தலைநகரமாக இருக்கும் Victoria மாநிலத்தையும் சிட்னி தலைநகரமாக இருக்கும் NSW மாநிலைத்தையும் பிரிப்பது இந்த மறே ஆறுதான். அதாவது தண்ணிக்கு இந்தப்பக்கம் விக்ரோறியா, அந்தப்பக்கம் NSW. இரண்டையும் இணைக்கும் பாலத்துக்கு மேலால் சூரியன் வருவதைப் படமெடுப்பதுதான் பிரசித்தம். அந்தக் குளிரில் எங்களுக்கு முதலே வந்து துண்டுபோட்டு இருந்தவர்கள் இரண்டு ஐரோப்பியர்கள். அடுத்த சோடி நாங்கள். விசயம் தெரிந்த உள்ளுர்க்காரர்கள் 7 மணிக்கு கமராக்களோடு வந்துசேர்ந்தார்கள்.

வெறுங்கையோடு கமராவை வைத்திருந்த எனக்கு ஐந்து நிமிடத்திலேயே கை விறைத்துவிட்டது.  ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டு அங்கு காத்திருந்து படம் பிடித்தோம். அதுவொரு அலாதியான  நினைவு. சூரியன் உதிப்பதைப் பார்ப்பதில் அப்படி என்ன அலாதி அனுபவம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. 

ஆதிகால மனித சமூகம் சந்ததி சந்ததியாக ஒவ்வொருநாளும் பார்த்து இரசித்த அந்தக் காட்சி, தாயகத்தில் அவ்வப்போது இரசித்துப் பார்க்கக் கிடைத்த அந்தக் காட்சி, புலம்பெயர்வாழ்வில் முற்றிலும் இழந்துவிட்ட அந்தக் காட்சி அன்றைய நாளில் அதுவும் புகைப்படப் பிரியர்கள் விரும்புகின்ற இடத்திலும் கோணத்திலும் பார்க்கக் கிடைத்தது. 

மறே என்கிற அப்பெரு நதிக்கரையில் சூரிய உதயத்தைப் பார்க்க நின்ற அந்த இரண்டுமணி நேரத்தில், நவீன உலகை மறந்து மனித இனத்தைப் பரிணமிக்கவைத்த நதியோர வாழ்க்கைமுறையைக் கற்பனையில் உணர்ந்தேன். 

அதற்குப்பின்பு எவ்வளவோ தடவைகள் மில்டூறா போய்வந்தாலும் அதிகாலையில் சூரியனைப் பார்க்க ஆற்றங்கரை ஓடும் என்னை ஒருமாதிரித்தான் பார்க்கிறார்கள். ஆனாலும் எனக்கு அலுப்பதேயில்லை. 

அடுத்தநாள் யார் தடுத்தாலும், எந்தக் குளிரென்றாலும் மறவனை அழைத்துவருவதென்று நானும் மனைவியும் தீர்மானித்துக்கொண்டோம். 
மறுநாள் இன்னும் பரவசமான அனுபவம் சூரிய உதயத்தில் கிடைத்தது. அதுபற்றி நாளை பார்ப்போம்.

======================================
மில்டூறா (MILDURA) குறித்த பதிவுகள் தொடரும்.






°C

°C