அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல்
எதிர்வரும் சனிக்கிழமை 24 நவம்பர் அன்று நடைபெறவுள்ளது. முன்வாக்குப்பதிவுகள்
ஏற்கனவே தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
மாநில அவைத்தேர்தலில் 2010இல் லேபர் கட்சியிடமிருந்து ஆட்சியை லிபரல் கட்சி
கைப்பற்றியது. ஆனால் அரைநூற்றாண்டு காலத்தில் ஒருமுறையும் நிகழ்ந்திராதவண்ணம் ஒரு
தவணையோடு ஓர் அரசாங்கத்தை மக்கள் மாற்றி 2014இல் மீண்டும் லேபர் கட்சியிடமே கொடுத்தார்கள்.
இம்முறை 2018இல் என்ன நடக்குமென்று வருகிற கிழமை தெரிந்துவிடும்.
இந்நேரத்தில் விக்ரோறிய மாநிலத்தின்,
குறிப்பாக மெல்பேர்ண்
நகரமும் அதை அண்டிய பகுதிகளின் அசைவியக்கத்தைப் புரிந்துகொள்வது பொருத்தமாக
இருக்கும்.
பொதுவாக லேபர்,
The Coalition (Liberals + Nationals) என இருகட்சிகளே
கோலோச்சிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அரசியலில் மூன்றாவதாக Greens கட்சியும் பலம்பெற்று வந்துகொண்டிருக்கின்றது. 2010ஆம் ஆண்டில்
அவுஸ்திரேலிய மத்திய நாடாளுமன்றின் கீழவைக்கு முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரை
கிறீன்ஸ் கட்சி பெற்றது. அது நூற்றாண்டுகாலம் லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய
மெல்பேர்ண் தொகுதியிலேயே பெற்றுக்கொண்டது. இன்றுவரை அக்கட்சி பெற்றுக்கொண்ட
ஒரேயொரு மத்திய நாடாளுமன்ற கீழவை இருக்கை அது மட்டுமே. இப்போதைக்கு இந்த
மெல்பேர்ண் தொகுதி கிறீன்ஸ் கட்சியிடமிருந்து பறிபோவதற்கு வாய்ப்பில்லை.
அதேபோல் விக்ரோறிய மாநில நாடாளுமன்றத்துக்கான 2014ஆம் ஆண்டு
தேர்தலும் மிக முக்கியமானது. நீண்டகாலத்துக்குப்பின்னர் ஒரே தவணையில் ஒரு
கட்சியிடமிருந்து ஆட்சி மாறியது மட்டுமல்ல,
முதன்முறையாக கிறீன்ஸ் கட்சி இரண்டு ஆசனங்களை கீழவையில்
பெற்றுக்கொண்டதும் இந்தத் தேர்தலில்தான். அதுவும் மெல்பேர்ண் நகரத் தொகுதியை
கிறீன்ஸ் எடுத்துக்கொண்டது. நகரின் மையத்துக்கு அருகாக இருக்கும் prahran தொகுதியையும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் (முதன்மை வாக்குகளில்
மூன்றாமிடத்திலிருந்தாலும் தெரிவு வாக்குகளால் தொகுதியை வென்று) கிறீன்ஸ் கட்சி
வென்றது.
பின்னர் கடந்த ஆண்டு northcote
தொகுதியின் லேபர்கட்சி உறுப்பினர் புற்றுநோயால் சாவடைய அத்தொகுதிக்கு
இடைத்தேர்தல் வந்தது. லேபருக்கும் கிறீன்சுக்கும் இடையில்தான் போட்டி.
மிகக்கடுமையான போட்டி. இதிலே லிபரல் கட்சி வேட்பாளரையே நிறுத்தாமல் ஒதுங்கிக் கொள்ள,
கிறீன்ஸ் கட்சி அந்தத் தொகுதியை வென்று தனது மூன்றாவது நாடாளுமன்ற
ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. அதுமட்டுமன்றி பூர்வகுடியைச் சேர்ந்த பெண்ணொருவரை
முதன்முறையாக விக்ரோறிய நாடாளுமன்றத்துக்கும் அத்தேர்தல் முடிவு அனுப்பியது.
மெல்பேண் நகர மையமும்,
அதிலிருந்து வடபுறமாக விரியும் அடுத்தடுத்த பட்டினங்களும் லேபருக்கும்
கிறீன்சுக்கும் இடையில்தான் போட்டியாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் 'இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை' என்பதைப் போல
லிபரல் கட்சி நடந்துகொள்கிறது. இந்தப்பகுதியில் நடந்த கடந்த இரண்டு
இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக்கொண்டது.
இப்போது richmond தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது லிபரல் கட்சி.
இம்முறை richmond தொகுதி கிறீன்ஸ் கட்சியிடம் விழக்கூடும்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைவிட brunswick தொகுதியும் லேபரிடமிருந்து கிறீன்சிடம்
விழக்கூடும். ஏற்கனவே இருக்கின்ற 3 தொகுதிகளோடு இந்த இரண்டையும் கிறீன்ஸ்
கைப்பற்றினால் ஒரு பலமான பேரம்பேசும் நிலைக்கு வந்துசேரும்.
இன்றிருக்கும் நிலைவரப்படி கிறீன்ஸ் கட்சி மிகப்பெரும்
நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கட்சிக்குள் ஏராளமான பிரச்சனைகள். தேசிய
அளவில் மட்டுமன்றி மாநில அளவிலும் சிக்கல்கள். சமந்தா இரத்தினம் மாநிலக் கட்சியின்
தலைவராக வந்து ஓராண்டுக்குள் மாநிலத் தேர்தலை கட்சி சந்திக்கிற நிலைமை ஒருபுறம், என்றுமில்லாதவாறு கிறீன்ஸ்
கட்சிக்குள் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுக்கள் சரமாரியாக முன்வைக்கப்படுகின்றமை
இன்னொருபுறம் என்று தொடர்ச்சியாக அடிமேல் அடிவிழுந்துகொண்டிருக்கிறது. செனற்றராக போட்டியிட்ட
ஒரு பெண் மூன்றாண்டுகளுக்கு முன்பு 'எப்படி அங்காடிகளில்
திருடுவது' என்று முகநூலில் எழுதிய குறிப்புகள் தற்போது வெளிவந்து
அப்போட்டியாளர் தேர்தலில் இருந்து விலத்தியுள்ளார். இப்போது இன்னொரு வேட்பாளர்மீது
பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.
கிறின்ஸ் கட்சி குறித்துத் தனியாக எழுதவேண்டும். புதிதாகக்
களமிறங்கியிருக்கும் Victorian
Socialist கட்சி குறித்தும் அதிகம் எழுத வேண்டும்.
தற்போதைய நிலைவரப்படி முடிவுகள் குறித்த எனது கணிப்பு:
லேபர்கட்சி தனித்து ஆட்சியமைப்பது 90%
லேபர்கட்சியும் கிறீன்சும் இணைந்து ஆட்சியமைப்பது 9%
Coalition
தனித்து ஆட்சியமைப்பது 0.5%
Coalition
கிறீன்சும் இணைந்து ஆட்சியமைப்பது 0.5%